சிறு வயதில் என் அக்கா வீட்டுக்கு வந்தாலே எனக்கு ஒரே குஷி! அக்காவை கொஞ்சி கெஞ்சி எப்படியாவது ஒரு கதை சொல்ல வச்சிருவேன். அவங்க சொல்ற கதை, எப்பவுமே வித்தியாசமா, சுவாரசியமா and கருத்துள்ளதா இருக்கும். அப்படி என்னை பாதித்த ஒரு Kutty Story இதோ!
ஒரு ஊர்ல அழகான இளைஞன் இருந்தானாம். அவனுக்கு எப்பவுமே தன் அழகு, இளமை, பலம் மேல ஒரு தனி கர்வம். தன்னால செய்ய முடியாத காரியமே இல்லை என்கிற ஆணவம். வயதானவர்களை பார்த்தாலே, கேலி கிண்டல் பண்றது, அவர்களது இயலாமை சுட்டிகாட்டி ஏளனம் செய்றதுன்னு போக்கிரித்தனம் செய்துகொண்டிருந்தான். பெரியவர்கள் சொன்ன அறிவுரையை காதில் போட்டுக்கொள்ளவில்லை. நாளுக்கு நாள் அவன் அராஜகம் கூடி கொண்டே போனது.
ஒரு நாள் அவன் காட்டுலே விறகு எடுக்க போகும்போது ஒரு குகையைப் பார்க்கிறான். களைப்பின் காரணமா குகைக்குள்ளே போய் அயர்ந்து தூங்குகிறான். சிறிது நேரம் கழித்து தூங்கி எழுந்தவுடன், விறகுகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கிறான். நடையிலே கொஞ்சம் அயர்வு, காலையிலிருந்த தெம்பும் உற்சாகமும் இப்போ இல்லை.
எப்பவும் நடந்துபோற பாதையோ, வித்தியாசமாக தெரிந்தது. பாதையை தவறி மறுபடியும் இருந்த இடத்திற்கே வந்துசேர்ந்தான். பொழுது சாய்ந்த நேரம். அலைந்து திரிந்ததில் தாகம் எடுக்க, பக்கத்திலிருந்த ஓடையை நோக்கி போனான். அந்த தெளிந்த நீரோடையை நோக்கி குனிந்தவனுக்கு அதிர்ச்சி! அவன் தோற்றமே மாறிபோயிருந்தது. இளமை துடிப்போடு இருந்தவன் முகத்தில் இப்பொது ஒடுக்கு விழுந்து நரை கூடியிருந்தது. கண்களை சுற்றி கருவளையம். முதுமை கூடி கிட்டதட்ட 70 வயது கிழவனை போலிருந்தான். தூங்கி எழுந்தவன் எப்படி இப்படி மாறிப்போனான்? என்ன நடந்தது என புரியாமல் பித்து பிடித்தவன் போலானான்.
அப்போது பலமான காற்று வீச, அருகிலிருந்த வேப்பமரத்திடம் சலசலப்பு. “ஹாஹாஹாஹா” இடிஇடி என சிரித்தது அந்த மரம். “என்ன நடந்தது என்று யோசிக்கிறாயா மனிதனே! குகைக்குள் இளபாறபோன நீ 40 வருடங்கள் கழித்து விழித்திருக்கிறாய்” என நடந்ததை கூறி அவன் தலையில் இடியை இறக்கியது. “வயதானவர்களை எள்ளி நகையாடிய நீ, எஞ்சி இருக்கும் காலம் வரை இந்த முதுமை தோற்றத்தில்தான் வாழ போகிறாய். உனக்கான தண்டனை இது” என கூறிவிட்டு பேசின சுவடே தெரியாமல் மீண்டும் மண்ணோடு வேரோடிபோயிருந்தது.
மரம் சொன்னதைக் கேட்டு அவன் கதிகலங்கி போனான். தான் செய்த தவற்றை எண்ணி எண்ணி கதறினான், வருந்தினான். ஆனால் காலம் கடந்துவிட்டிருந்தது.
குருத்து ஓலை பழுத்த ஓலையைப் பார்த்து சிரித்ததாம்,
ஆனால் இந்த குருத்து ஓலை, மறந்துவிட்டது தானும்
ஒரு நாள் பழுத்த ஓலை ஆவோம் என்று!