‘இவனை இப்ப யாரு கூடை நிறைய மாம்பழம் வாங்கிட்டு வர சொன்னது? வீட்ல இருக்கறது ரெண்டு பேருதான்’ என்று மகனை எண்ணி அலுத்தவாறே மாம்பழங்களைப் பார்த்தார் மங்கை. சிறிது கொளகொளவென மூன்று பழங்கள் இருந்தன. இந்த மூன்றையும் வேலைக்கார அம்மாள் மனோவிற்கு கொடுத்துவிடலாம் என்று தனியே எடுத்து வைத்தார்.
அப்போது அழைப்பு மணி அடிக்க வெளியே எட்டி பார்த்தார் மங்கை. அங்கே வேலைக்கார அம்மாள் மனோ நின்று கொண்டிருந்தார். மங்கைக்கு ஆச்சிரியமாக இருந்தது. “என்ன மனோ இந்த நேரத்துலே வந்திருக்கீங்க?” என கேட்டார்.
“அது ஒண்ணுமில்லையம்மா என் பேரன் ஸ்வீட் கம்பெனியில் வேலை செய்றானில்ல. அவன்கிட்ட ஒரு நாலு பாக்கெட் கடலைமிட்டாய் நல்லதா பார்த்து எடுத்துவர சொன்னேன். மொதலேதான் கொண்டு வந்தான். அதன் கொடுத்துட்டு போகலான்னு வந்தேன்.”
கொளகொள என்று இருந்த மாம்பழங்களை வேலைக்கார அம்மாளுக்கு கொடுக்க நினைத்த நமக்கும், நமக்காக நல்ல மிட்டாய் கொடுத்துவந்த மனோவிற்கும் எவ்வளவு வித்தியாசம்? என நினைத்த மங்கை தன்னை அற்பப் புழுபோல பார்த்தார்.