ஒரு முறை மன்னரைக் காண இரு புலவர்கள் வந்திருந்தனர். பரிசு கொடுக்கும் சமயத்தில், மன்னர் அவர்களிடம், என்ன கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என கேட்டார். அவர்களில் பேராசை மிகுந்த புலவர், “நிறைய பொன்னும் பொருளும் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்றார். மற்றோருவரோ, “கடவுளின் கருணையும் அருளும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வேன்” என சொன்னார்.
அவர்களின் பதிலைக் கேட்ட மன்னர், பேராசைக்காரருக்கு ஒரு பூசணிக்காயையும், இரண்டாம் புலவருக்கு ஒரு தங்க நாணயத்தையும் கொடுத்தார். பேராசைக்கார புலவருக்கு பெருத்த ஏமாற்றம். “போயும் போயும் இந்த பூசணிக்காயையா மன்னர் கொடுக்கவேண்டும். இது கால் காசு கூட பெறாதே” என நொந்துக்கொண்டார்.
தீடீரென்று பொறி தட்ட, தன்னுடன் வந்த புலவரை நோக்கி, “நானோ சம்சாரி , இந்த பூசணிக்காயை நம்பி பிழைப்பை ஓட்ட முடியாது. இந்த பூசணிக்காயை வைத்துக் கொண்டு, எனக்கு அந்த தங்க நாணயத்தைத் தருகிறீர்களா? என் வீட்டில் அடுப்பாவது எரியும் நண்பா” என கேட்டார்.
மற்றவரும் அவர் நிலையைக் கருதி தங்க நாணயத்தைக் கொடுத்துவிட்டு பூசணிக்காயைப் பெற்றுக்கொண்டார். வீடு திரும்பியவரிடம் அரசர் பரிசாக என்ன கொடுத்தார் என ஆவலாக கேட்ட மனைவிடம், பரிசாக பெற்ற தங்க நாணயத்தை தன்னுடன் வந்த புலவரிடம் தந்ததைச் சொன்னார். தலையில் அடித்துக்கொண்டாள் மனைவி.
“இவ்வளவு அசடாகவா இருப்பீர்கள்? கால் காசு பெறாத பூசணிக்கா தங்க நாணயத்தை தந்தீர்கள்?” என்றார் அவரின் மனைவி. “விட்டு தள்ளு லட்சுமி! கடவுளின் கிருபை அவ்வளவுதான். இந்த பூசணியை வைத்து சமையலாவது செய்” என சொன்னார் புலவர்.
சிறிது நேரம் கழித்து சமையல் அறையிலிருந்து ஒரு கூச்சல். “என்னங்க இங்க வந்து பாருங்களேன்”. சத்தத்தைக் கேட்டு சென்று பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துப் போனார். இரண்டாக பிளக்கப்பட்ட பூசணியில் தங்கமும் வைரமும் கொட்டிக்கிடந்தன.
தன்னுடன் வந்த புலவர் கேட்டபடியே மன்னர் பொன்னும் பொருளையும் கொடுத்தும் , அவரால் அதை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணி கவலைப்பட்டார் பூசணிக்காய் பெற்ற புலவர்.
#சிந்தனைத் துளி
- போதும் என்ற எண்ணமே அமைதியும் நிம்மதியும் அளிக்கும்
- இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வதே உத்தமம். வாழ்க்கை ரசித்து ருசிக்கும்.