எழுத்தாளர்: ஆர்.மணிமாலா
தனுஷ்கோடி இரக்க குணம் கொண்ட ஒரு பெரும் தொழிலதிபர். தந்தையை போலவே மகன் உதயகுமாரும் நல்லவன். கலெக்டரான கல்பனா சென்னைக்கு வரப்போகிறாள் என தெரியவும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறான். அவளை அழைத்துவர ஏர்போர்ட்டு மிக விரைவாகவே சென்றுவிடுகிறான்.
தான் நேசிக்கும் கல்பனாவைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவளின் வரவுக்காக ஆவலாக காத்திருக்கிறான். கல்பனா வந்திறங்க அவளை மர்ம மனிதன் ஒருவன் பூச்செண்டோடு நெருங்கி சிரித்தவாறே அவளை எச்சரிக்கிறான். அவள் எங்கே சென்றாலும் தான் கண்டிப்பாக அங்கே இருப்பேன் என சொல்லிவிட்டு செல்கிறான்.
கல்பனா தனது வீட்டில் தங்கப்போவதில்லை என தெரியவும் சற்று ஏமாற்றம் அடைகிறான். கலெக்ட்ரான கல்பனாவைக் கண்டு ஓய்வூதியம் பற்றி மனு கொடுக்க பெரியவர் கணேசன் பெரும் முயற்சி செய்கிறார். ஆனால் ஒவ்வொரு தடவையும் கல்பனாவைக் காணமுடியாமல் போகிறது. இந்த நிலையில் அவர் வழுக்கி விழுந்து விட , கால் முறிவு ஏற்படுகிறது. இதனால் மனைவி சாரதா வேலை தேடி தனுஷ்கோடி இல்லத்துக்கு வர பரிதாபப்படும் தனுஷ்கோடி வேலையை தருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி காணாமல் போன தன் மகளை எண்ணி வருத்தப்படுகிறார்கள்.
கல்பனாவுக்கு தனது ஆபிசில் வேலை செய்யும் நாகரத்னத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி மரியாதையும் பாசமும் ஏற்படுவதைக் கண்டு வியக்கிறாள். அதே வேளையில் அந்த மர்ம மனிதனின் தொந்தரவு கல்பனாவுக்கு தொடர்கிறது. அவள் வீட்டிக்கு போன் செய்து எச்சரிக்கிறான். ஆனால் கலெக்டரான கல்பனாவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடுக்கவும் தயங்குகிறாள்.
மகன் உதயகுமாரின் மனநிலையை உணரும் தனுஷ்கோடி கல்பனாவைத் தேடி செல்கிறார். அவளிடம் உதயகுமார் அவளைக் காதலிப்பதாவும் அவனை மணக்க கோருகிறார். ஆனால் கல்பனாவோ அந்த தகுதி தனக்கு இல்லை என மறுத்துவிடுகிறாள். உதயகுமாரை தனியாக சந்தித்து தனக்கு நேர்ந்ததை சொல்ல ஆரம்பிக்கிறாள்.
கல்பனாவை சுற்றி இருக்கும் மர்மம்தான் என்ன? கல்பனாவைத் தொடரும் அந்த மர்ம மனிதன் யார்?
தன் நிஜ பெற்றோருடன் கல்பனா வாழ்வில் இணைந்தாளா?