எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன்
துணைவியை இழந்த ஏழை பிராமணர் ராமசேஷன். ஒரே ஒரு பெண்ணான ராதாவுக்கும் கல்யாணம் முடித்து விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் பெண் ராதா வீட்டின் முன் வந்து அழுவது போல் கனவுக் காண பதைபதைத்து எழுகிறார்.
இதேபோல் மனைவி பற்றி கனவு கண்ட போது, அவளும் இறந்து போனது நினைவுக்கு வர முதல் வேலையாக ராதவைக் காண அவள் வீட்டுக்கு செல்கிறார். அங்கே வீட்டின் முன்போ எக்கச்சக்க கூட்டம். உடம்பின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு உள்ளே போனால், மகள் ராதாவின் கழுத்தில் காயம்; கழுத்தைச் சுற்றி கட்டு.
விசாரிக்கவும், பேத்தி சுவேதாவை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வர சென்ற போது ஒரு வழிப்பறி கொள்ளையனிடமிருந்து சங்கலியை மீட்க போராட, கழுத்து காயம் ஏற்பட்டது என தெரியவருகிறது. மாப்பிள்ளை விஸ்வநாதனுக்கு எங்கே மாமனார் நம் வீட்டிலே தங்கிவிடுவாரோ என்ற பயம். அந்த ஏழை பிராமணனைச் சம்பந்தி வீட்டில் எல்லாருமே துச்சமாகப் பார்க்கின்றனர், விஸ்வநாதன் தம்பி ரகுராமனை தவிர.
ராமஷேனை ஆபீஸ் செல்லும் வழியில் வீட்டில் கொண்டு விடுவதாக விஸ்வநாதன் சொல்ல, தான் இங்கு இருந்து மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் அடம் பிடிக்க வாக்குவாதம் முற்றுகிறது. அப்பா அவமானப்படுவதை தாங்க முடியாமல் அவர் இங்கே இருந்தால்தானே பிரச்னை, தான் அப்பா வீட்டில் சிறிது காலம் தங்கிவிட்டு வருகிறேன் என ராதா தன் மகளுடன் வெளியேறுகிறாள். ராதாவின் செயலைக் கண்டு ஆத்திரமடைகிறான் விஸ்வநாதன். தன்னை மதிக்காமல் சென்ற மனைவியைப் பழிவாங்க நினைக்கிறான்.
கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி விசாரிக்க போலீஸ் வர நாங்கள் ஆச்சாரமான குடும்பம் அதனால் அதைப் பற்றி விசாரணை வேண்டாம் என விஸ்வநாதனின் தந்தை சதாசிவம் சொல்கிறார். ஆனால் வீட்டை விட்டு கிளம்பிய ராதா போலீஸ் ஸ்டேஷனலில் புகார் கொடுக்கக் காத்திருக்கிறாள். போலீசும் திருடன் கலிவர்த்தனைக் கண்டுபிடிக்க தங்க சங்கிலி மீட்கப்படுகிறது.
அவன் நான் வேண்டும் என்றே திருடவில்லை தான் ஒரு திருடன் என்று ஊரில் இருக்கும் குடும்பத்திற்கு தெரியாது எனவும் வாய்பேச முடியாத தன் தங்கையின் திருமணதிற்காக தான் சங்கிலியைத் திருடினேன் என சொல்கிறான். இதை நிரூபிக்க உன்னால் வீட்டு முகவரியைத் தர முடியுமா என அவனிடம் கேட்கிறாள் ராதா!
- திருடனின் விஷயத்தில் ராதாவின் முடிவு என்ன?
- பழிவாங்க நினைத்த விஸ்வநாதன் அடுத்து என்ன செய்தான் ?
- மகளின் குடும்ப வாழ்வைத் சரிப்படுத்த ராமசேஷனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
யதார்த்தங்களும் உண்மைகளும் நிறைந்த இந்த நான் ராமசேஷன் வந்திருக்கேன் புதினம் நிச்சயம் உங்கள் இதயத்தைத் தொடும்!