எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
குட் ஹோர்மோன்ஸ் என்கிற ஒரு பெரிய தனியார் மருத்துவமனையின் வாசலில் நான்கு பேர் நுழைகிறார்கள். ரிசெப்ஷனை நெருங்கி டாக்டர் இந்துவதனாவை பார்க்கவேண்டும் எனவும் தாங்கள் ஏற்கனவே அப்பொய்ன்மெண்ட் வாங்கிவிட்டோம் என சொல்கிறார்கள். ரிசெப்ஷனிஸ்ட் டைரியைப் புரட்டி பார்த்து விட்டு குரு என்கிற பெயரில் அப்பொய்ன்மெண்ட் இல்லை என கூற, ஒரு வேளை டாக்டர் சொல்ல மறந்திருக்கலாம் என அந்த நால்வரில் குரு என்பவன் சொல்கிறான்.
டாக்டரையே கேளுங்கள் என சொல்ல, டாக்டரும் வர அனுமதிக்க, முதலாம் மாடி இரண்டாவது அறையில் இருக்கும் டாக்டர் இந்துவதனாவின் அறைக்கு நால்வரும் செல்கிறார்கள். அவர்களை அமர சொல்லிவிட்டு என்ன விஷயம் என கேட்கிறார் டாக்டர்.
இரண்டு வருடத்துக்கும் முன் கயல்விழி என்கிற பெண் சாலையில் அடிபட்டு கிடக்க தெரிந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. டாக்டர் இந்துவதனா அந்த பெண்ணை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்க்கிறார். கயல்விழிக்கு மூளைச்சாவு ஏற்படவே டாக்டர் அவளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்துவிடுகிறார். போலீஸ் கமிஷனரின் உதவியால் டாக்டர் இதை செய்துமுடிகிறார்.
நடந்த விசயத்தைக் கேட்டு இப்போது நீங்கள் நால்வரும் ஏன் வந்திருக்கிறார்கள் என டாக்டர் கேட்கிறார். கயல்விழியின் உடல் உறுப்புக்கள் நான்கு பேர்களுக்குப் பொருத்தப்பட்டது எனவும் அந்த நால்வரும் நாங்கள் தான் என சொல்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்தத் தகவல்படி டாக்டர் இந்துவதனாவுக்கு கயல்விழியை ஏற்கனவே தெரியும் எனவும் விபத்து நடந்தன்று தான் கயல்விழியைத் தெரியும் என டாக்டர் சொல்வது பொய் என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் இதை பற்றி விசாரிக்கவே வந்திருக்கிறோம் என நால்வரும் சொல்கின்றனர்.
டாக்டரோ இரண்டு வருடத்துக்கு முன் நடந்த விசயத்தைப் பற்றி பேச தனக்கு எந்த அவசியமில்லை எனவும் விசாரிக்க நீங்கள் போலீசும் இல்லை என கறாரான குரலில் சொல்கிறார். போலீஸ் வந்து கேட்டால் இந்த கேள்விகளுக்குப் தான் பதிலளித்து கொள்வதாக கூறுகிறார்.
டாக்டர் சொல்லி முடிக்கவும், குரு ரிசெப்ஷன் ஹாலில் மஃப்டியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் நவநீதனை அழைக்கிறான். கயல்விழியைப் பற்றி இந்த நால்வருக்கும் எப்படி தெரியவந்தது என்ற புதிரை இன்ஸ்பெக்டர் நவநீதன் அறையின் உள்ளே வந்ததும் போட்டு உடைக்கிறார். மாட்டிக்கொண்ட உணர்வினாலோ என்னவோ டாக்டர் இதுவதனா அருகிலிருந்த ஒரு ஊசியை தன் மீது செலுத்திக்கொள்கிறார். இன்ஜெக் பண்ண உடனே இதுக்குமேல் தன்னால் உதவ முடியாது நவநீதன் என கூறிவிட்டு மயக்கமடைகிறார்.
- இந்த நால்வருக்கும் கயல்விழியின் உடல் உறுப்புகள் தங்களுக்கு பொருத்தப்பட்டது என எப்படி தெரியவந்தது? இவர்கள் எப்படி ஒன்றிணைந்தனர்?
- இன்ஜெக்ஷனை செலுத்திக்கொண்ட டாக்டர் இந்துவதனா உயிர் பிழைப்பாரா?
- ஒரு வேளை டாக்டரின் உயிர் பிரிந்தால், இந்த கயல்விழி யார்? டாக்டர் முன்தினம் பார்த்த அந்த பெண் மறுநாள் உயிர் இழக்க என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கு பதில்….
மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ராஜேஷ்குமாரின் “நள்ளிரவுச் செய்திகள் வாசிப்பது துர்கா” நாவலை கண்டிப்பா படிங்க.