எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
நந்திபுரத்தில் மாடு மேய்ப்பவன் கிருஷ்ணன். நன்றாக படித்துக் கொண்டிருந்தவனைச் சிற்றன்னை படித்தது போதும் என மாடு மேய்க்க வைத்துவிட்டாள். நந்திபுரத்தில் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி மிகவும் பிரசித்திப் பெற்றது. நந்தியின் காதில் சொல்லப்படும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதாகவும் , மறைத்துவைக்கப்பட்டிருக்கும் புதையலை நந்தி பாதுகாப்பதாகவும் அந்த ஊரே நம்புகிறது. இரவில் அந்த நந்தி சிலை உயிர்பெற்று கோயிலை வலம் வருவதாகவும் நம்பப்படுகிறது.
இப்படி ஒருநாள் கிருஷ்ணன் மாடு மேய்த்து கொண்டிருக்கும் போது அவன் மீது இடி விழுகிறது. உயிர்க்கு எவ்வித பாதகமும் இல்லாமல் , அதிசயமாக நடப்பதை முன்கூட்டியே கணிக்கும் சக்தி கிடைக்கிறது. அவன் சொல்வது அனைத்தும் நடக்கிறது. அவன் சொன்னது போலவே அவனின் சிற்றன்னை மீது ஒரு குரங்கு பாய்ந்து அவளைக் கடிக்கிறது. ஊர் மக்கள் அவனின் சக்தியைப் பார்த்து நந்திதான் அவன் உருவிலிருந்து குறி சொல்லவதாக நம்புகிறார்கள். கிருஷ்ணனின் சிற்றனையோ , இதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறாள்.
மறுபுறத்தில் சினிமாவில் நேர்மையாக இருக்கும் கதாநாயகி சுரபியின் கதை தொடர்கிறது. ஒழுக்கமாக இருக்கும் அவளிடம் தயாரிப்பாளர் மகனும் ஒரு பெரிய மனிதரும் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவளின் கற்பை விலைக்குக் கேட்கிறார்கள். அவள் மறுத்தால் , போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துவிடுவார்கள் என மிரட்டுகிறார்கள். சுரபியுடன் இருக்கும் ஜானகியம்மாள் நந்தியை வேண்டிக்கொள்ளும்படி சொல்கிறார். நந்தியைத் தேடி நந்திபுரம் புறப்படுகிறார்கள்.
இடையில் ஒரு டிவி நிறுவனம் இந்த புதையல் விஷயத்தை வைத்து கொண்டு டிஆர்பியை உயர்த்த எண்ணுகிறது. அதே சமயம் ஒரு நம்பூதிரியும் புதையலைத் தேடி அலைகிறார்கள்.
அந்த பழைமையான புதையல் கிடைத்ததா? சுரபியின் வாழ்க்கையில் திருப்பம் வந்ததா? நந்திபுரத்தின் நந்தியின் மகிமை என்ன? என்பதுதான் இந்த நந்திபுரம்.