எழுத்தாளர்: ரமணிசந்திரன்
காலேஜில் படிப்பை முடித்து விட்டு வீடு திரும்புகிறாள் சுந்தரவதனி. எப்போதும் போல அண்னன் ரமேஷ் ரயில் நிலையத்தில் காத்திருக்க அவனுடன் வீடு திரும்புகிறாள். பெற்றோர் இருவரும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சியைக் காட்டாது போகவே , ஏமாற்றமடைகிறாள் வதனி. அம்மா மரகதம் வதனியை கிட்டகூட நெருங்கவிட்டதில்லை. அண்னன் ரமேஷிடம் காட்டும் அன்பை அவளிடம் மட்டுமே காட்டியதில்லை.
அப்பவோ தாய் இல்லாத சமயத்தில் மட்டுமே , அருகில்வந்து தலையைத் தடவி கொடுத்தது உண்டு. அந்த வீட்டில் அண்ணன் ரமேஷும் பாட்டியும் மட்டுமே அவளிடம் அன்பைப் பொழிபவர்கள். பாட்டியோ இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டுருந்தது. வதனியிடம் மரகதம் நடந்துகொண்டவிதத்தில் ரமேஷ் ஆத்திரமடைய , வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதத்தில் வதனி தனக்கு பிறந்தவளில்லை எனவும் ரமேஷின் அப்பாவின் தவறான உறவின் மூலம் என உண்மை தெரியவரவும் வதனி அதிர்ந்துப்போகிறாள்.
இத்தனை நாள் பாசமாகமிருந்த அண்ணன் அன்னைக்கு ஆதரவாக விலகிப்போனான். வீட்டை விட்டு வெளியேற முடிவுசெய்து , தந்தையிடம் பெற்ற அன்னையின் விவரம் கேட்டுக்கொண்டாள். அவரோ அன்னையைப் பற்றி தவறாக எடுத்துரைக்க , அருவருப்புடன் அவரை தூசிபோல் மதித்து விட்டு , பாட்டி தனக்கு கொடுத்து வைத்திருந்த பணத்தோடு வெளியேறுகிறாள்.
ஒரு துப்பறிவு நிபுணர் மூலம் அம்மா வனிதா இருக்கும் இடமறிந்து அவரைத் தேடி செல்கிறாள். மனசாட்சி இன்றி பிறந்த குழந்தையைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு ஐந்து லட்சம் பணம் வாங்கிக்கொண்ட அன்னையைப் பார்த்து ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அம்மா அனிதா தற்போது ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி என தெரியவரவும் , அவரின் அருகில் கூட நெருங்க முடியாது என புரிந்துக்கொள்கிறாள். அந்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரவே , நேர்முக தேர்வுக்குச் செல்கிறாள்.
அங்கே அம்மாவையும் அவரை அம்மாவென்று அழைக்கும் சதானந்தனைக் காண்கிறாள். வேலைக்குக் கிடைத்துவிடவே , தாயின் அருகிலிருக்கும் வாய்ப்பை நினைத்து சந்தோசப்படுகிறாள். சதானந்தன் காதலைச் சொல்ல , முதலில் சம்மதம் சொல்லும் வதனி பிறகு எங்கே தாயின் கடந்த காலம் தெரிந்தால் , அன்னை வனிதாவை வெறுத்து ஒதுக்கி விடுவார்களோ என எண்ணி காதலை மறுத்துவிடுகிறாள்.
சதானந்தனோ காரணத்தைக் கேட்டு விடாப்பிடியாக இருக்கிறான். அவளோ விலகி விலகி செல்கிறாள். இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி?
பிறந்த கைக்குழந்தையை வனிதா பணதிக்காக ஏன் கொடுத்தார்? பதில் தேடினேன் வந்தது நாவலில்…