எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
திருமணம் ஆகி வருடங்களாகியும் குழந்தை பேறில்லாமல் தவிக்கிறார்கள் ரகுபதியும் ஜானகியும். மனக்கவலையைப் போக்க ஏற்காடு செல்ல, அங்கே கஜலட்சுமி அம்மாள் என்னும் பெண் சித்தரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. காதலித்தவனால் கைவிடப்பட்ட பெண் ஒருத்தி குழந்தையை மலையில் விட்டுவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். கைவிடப்பட்ட அந்த ஆண் குழந்தையை ரகுபதியும் ஜானகியும் கஜலட்சுமி அம்மாளின் சொல்படி எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தையைத் தன் பிள்ளையைப் போலவே வளர்க்கிறார்கள்.
தற்கொலைச் செய்யப்போன அந்த பெண் கிணற்றில் விழுவதை பார்த்த ஊர் மக்கள் அவளை காப்பாற்றுகிறார்கள். ஆனால் கிணற்றில் விழும்போது தலையில் அடிபட்டுவிட, சுயநினைவை இழக்கிறாள். ஊர் மக்களும், மிராசுதாரும் அவளைக் கஜலட்சுமி அம்மாளிடம் அழைத்துப் போகிறார்கள். அவர் தானே அவளை பார்த்துக்கொள்வதாவும் அவளுக்கு சாமுண்டி எனவும் பெயரிடுகிறார்.
குழந்தையை அழைத்து கொண்ட போன ஜானகி, குழந்தை ஏன் அடிக்கடி அழுகிறது என புரியாமல் விழிக்க, கீரை விற்கும் கண்ணம்மாளின் ஆலோசனைப்படி வாடகைத் தாயை வேலைக்கு வைக்கிறாள். ஆனால் அந்த பெண்ணும் நோய்வாய்ப்பட, குழந்தையும் புட்டி பாலைத் தவிர்க்க செய்வதறியாமல் கஜலட்சுமி அம்மாளைக் காண செல்கிறார்கள்.
அவர்கள் போன அதே சமயத்தில் சாமுண்டியின் மீது பாம்பு விட்டு கடிக்க வைக்கும் கொலை முயற்சி நடக்கிறது. கஜலட்சுமி அம்மாள் அவர்களிடம் சாமுண்டியை அழைத்துப் போக சொல்கிறார். குழந்தையின் பிரச்சனைக்கும் தீர்வு பிறக்கிறது. குழந்தைக்குப் பேர் வைக்கும் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக நடத்துகிறான் ரகுபதி.அங்கே வைத்து குழந்தையையும் சாமுண்டியையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. கொலை செய்ய வந்த வேங்கையன் பல நாட்களாக தேடப்பட்ட குற்றவாளி என்பதால், விருந்துக்கு வந்த போலீசிடம் மாட்டிக்கொள்கிறான்.
எங்கே வீட்டில் இருக்கும் சாமுண்டியால் தன் வேலை போய்விடும் என்ற அச்சத்தால் கண்ணம்மாள் சாமுண்டியை வெறுக்கிறாள். குழந்தையும் சாமுண்டியிடம் அதிகம் ஒட்டிக்கொள்வதால் ஜானகியும் அதிக எரிச்சல் அடைகிறாள். ஒரு கட்டத்தில் சாமுண்டியை வெளி மாநிலம் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விடலாம் என கண்ணம்மா சொல்ல, முதலில் தயங்கும் ஜானகி, சாமுண்டி குழந்தையிடம் அதிக உரிமை எடுத்துகொள்ளவதால் கடுப்பில் ஒத்துக்கொள்கிறாள்.
தனித்து விடப்பட்ட சாமுண்டியோ விபச்சார விடுதியில் மாட்டிக்கொள்கிறாள். நடந்ததை அறிந்த ரகுபதி சாமுண்டியைத் தேடி அலைகிறான். இவ்வேளையில் போலீசிடம் மாட்டிக்கொண்ட வேங்கையனால் சாமுண்டியின் நிலைக்கு யார் கரணம் என தெரியவருகிறது.
தாய்மையின் பெருமைகளும் அமானுஷங்களும் நிறைந்த துளிர்க்கும் நாவலை கண்டிப்பாக வாங்கி படிங்க! |