ஒருமுறை இரண்டு பௌத்த துறவிகள் ஆலயத்தின் மடத்திற்கு செல்லும் வழியில் போய்க் கொண்டிருந்தனர். எதிரில் ஒரு ஆறு எதிர்ப்படவே, அதைக் கடக்க தயாராகினர். அப்போது யாரோ அவர்களை அழைப்பது போல் ஒரு குரல் கேட்கவே , திரும்பி பார்த்தனர். அருகில் ஒரு அழகான இளம்பெண் தென்பட்டாள்.
அவள் மறுகரைக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா என வினவினாள். வினாடி பொழுது கூட தயங்காமல் துறவிகளின் ஒருவர், அந்த பெண்ணைக் கையில் தாங்கி கொண்டு ஆற்றைக் கடந்து மறுகரையில் சேர்த்தார். நன்றி தெரிவித்து விட்டு அந்த பெண் சிட்டாக பறந்துப் போனாள்.
மடத்தை அடையும் வரை இரண்டாம் துறவி எதுவும் பேசாமல் கூடவே நடந்து வந்தார். அதற்கு மேல் இருப்பு கொள்ளாமல் அன்றிரவு முதலாம் துறவியிடம், “நாம் துறவிகள். நமக்கு விதிக்கப்பட்ட கோட்பாடுகளின் படி , நாம் பெண்களின் அருகே , முக்கியமாக அழகான இளம்பெண்களின் அருகே செல்ல கூடாதுதானே? நீங்கள் ஏன் அந்த பெண்ணை கையில் சுமந்துக் கொண்டு வந்து கரையில் விட்டீர்?” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“நான் அந்த பெண்ணை அந்த கரையிலே இறக்கி விட்டுவிட்டேன். நீங்கள் இன்னும் சுமந்துக் கொண்டிருக்கிறீர்கள் போல?” என பதிலளித்தார் மற்றொருவர்.
#சிந்தனைத் துளி
- மற்றவர்களிடம் குறை காணும் நீங்கள், உங்களின் குறைகளை உணர்ந்தது உண்டா?
- வீண் குற்றம் காணுவதில் அப்படி என்ன சுகமிருக்கிறது?