எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
வீடு வீடாய் ஊதுபத்தி விற்கும் காயத்ரியைப் பள்ளியில் ஒன்றாய் படித்த சத்திய நாராயணன் வழியில் சந்திக்கிறான். பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அவள் ஊதுபத்தி விற்பதை எண்ணி சத்திய நாராயணன் வருத்தப்பட அவளோ விதியின் விளையாட்டு என விரக்தியாக சொல்கிறாள். அவளுக்கு கண்டிப்பாக ஒரு வேலையை வாங்கி தருவதாக வாக்களித்து அவளின் முகவரியை வாங்குகிறான்.
அவனிடம் விடைபெற்று தன் வேலையைத் தொடர்கிறாள். ஊதுபத்தி விற்க ஒரு பங்களாவின் கதவைத் தட்ட, புண்ணியகொடி எனும் தொழிலதிபர் அவளை ஊதுபதியின் சாம்பிளைக் காட்ட உள்ளே வர சொல்கிறார். உள்ளே வந்தவளிடம் புண்ணியக்கோடி தவறாக பேச ஆரம்பிக்க, காயத்திரியோ தன் பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவன் முன்னே நீட்டுகிறாள். அவனோ பயத்தில் வெலவெலத்துப் போகிறான்.
இதற்கு முன் ஊதுபத்தி விற்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்த அவனுக்கு மரணம் தான் தண்டனை என கூறி ட்ரிக்கரை அழுத்த குண்டுகள் மார்பிலும் வயிற்றிலும் சரமாரியாக பாய்ந்து இறந்து போகிறான். அதே சமயம் ரெய்டுக்கு ஆபிசர்கள் வர காயத்திரி பின்பக்க கதவு வழியாக தப்பித்து விடுகிறாள். தகவல் கிடைத்து போலீஸ் வர ஊதுபத்தி பாக்கெட்டையும் கால் தடத்தையும் வைத்து ஊதுபத்தி விற்கும் பெண் தான் கொலையாளியாக இருக்கும் என கணிக்கிறார்கள்.
எதேச்சையாக காயத்திரியைச் சத்திய நாராயணன் மறுபடியும் சந்திக்க அவள் படபடப்பாக இருப்பதைப் பார்த்து வினவுகிறான். அவளோ தலைவலி என சமாளிக்கிறாள். வழியில் நண்பன் இன்ஸ்பெக்டர் கதிரேசனைச் சத்யநாராயன் சந்திக்க கொலையைப் பற்றியும் கொலையாளியைப் பற்றியும் தெரிய வர அவனின் சந்தேகம் காயத்திரியின் பக்கம் திரும்புகிறது.
அவள் கொடுத்த முகவரிக்கு சென்றால் அங்கே காயத்திரி என்கிற பெயரில் வேறு ஒரு பெண் இருக்கவும் அதிர்ந்து போகிறான் சத்தியநாராயணன். மேலும் இரண்டு கொலைகள் நடக்க, காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்த, காயத்திரியைத் தேடும் ஒவ்வொரு முயற்சிகளிலும் தொடர் முட்டுக்கட்டைகள்!
இந்த மர்மங்களுக்கான முடிச்சுகள் அவிழும் போதும் அதிர்ச்சியில் உறைவது நிச்சயம். குற்றம் செய்தவர்கள் நீதி தேவதையிடம் தப்ப முடியாது என்பதே இந்த தப்பு தப்பாய் ஒரு தப்பு! |