எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
கணவர் கோவிந்தராஜன் இறந்து 8 வருடங்கள் கழித்து அன்றுதான் லட்சுமியின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்க்கிறது. ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தவரின் முன் இரும்பு கம்பிகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென்று பிரேக் போட, சரியான நேரத்தில் பிரேக் போட முடியாமல் மூன்று இரும்பு கம்பிகள் மார்பில் பாய்ந்துவிட, அந்த இடத்திலே உயிர் விட்டிருந்தார் கோவிந்தராஜன்.
அவரின் தம்பியோ கட்டுமான பகுதியில் கட்டடம் சரிந்துவிழ அவரும் சேர்ந்து விழ கீழே நட்டிருந்த 3 பில்லர் கம்பிகளில் விழுந்து வயிறு கிழிந்து இறந்து போயிருந்தார். இப்படி வரிசையாக மரணங்கள் நேர்ந்திருந்த சமயத்தில் மகன் கஜேந்திரன் சிறப்பாகப் படித்து ஒரு விண்மில் கம்பெனியில் ப்ராஜெக்ட் என்ஜினீயராக இன்று தான் முதல் நாள் வேலைக்குப் போவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள் லட்சுமி.

முதல் நாள் வேலையிடத்தை சுற்றிப் பார்க்கும் கஜேந்திரன் அங்கே ஒரு திரிசூலம் குத்தப்பட்டு அதற்கு பூஜைகள் நடந்திருப்பதைக் கண்டு வியக்கிறான். பிசினஸ் நடக்கும் இடத்தில் ஏன் இப்படி மூடத்தனமான நம்பிக்கை என ஏளனம் செய்கிறான். கடவுள் நம்பிக்கையை இப்படி எங்கு பார்த்தாலும் சிறு கோவிலைக் கட்டி தான் வெளிப்படுத்தவேண்டும் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என இளங்கோவனிடம் சொல்கிறான்.
தான் பார்த்ததை வீடு திரும்பியதும் அன்னையிடம் பகிர்கிறான். லட்சுமியோ அது சாமி எனவும் அவநம்பிக்கையாக எதையும் பேசவேண்டாம் என எச்சரிக்கிறார். ஆபீஸ் தோழி அஜந்தாவுடன் சூலம் இருந்த அதே இடத்திற்குள் கஜேந்திரன் வர, அங்கே ஒரு பெண் திரிசூலத்திற்குப் பொட்டிட்டு வணங்குவதை பார்க்கிறான். ஏளனமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது, அந்த பெண்ணிற்கு ஆவேசம் வந்து கஜேந்திரனை நோக்கி அந்த திரிசூலத்தை வீசுகிறாள். திரிசூலம் அவன் மீது பாய்ந்து வயிற்றைக் கிழிக்கிறது.
நடந்ததை அறிந்த லட்சுமி அஜந்தாவுடன் திரிசூலம் இருக்குமிடத்துக்கு வந்து அதை வணங்கி தன மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு உயிர் பிச்சை கேட்கிறாள். கஜேந்திரன் குணமாகி வீடு திரும்புகிறான். அவன் மீது திரிசூலத்தை வீசிய பெண் வேலை விட்டு நீக்கப்பட, அவள் கஜேந்திரனிடம் வந்து நிற்கிறாள். அன்று தனக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாது எனவும் பிழைக்க வழி இல்லாமல் நிற்பதாக சொல்கிறாள்.
ஒரு சின்ன நிபந்தனையோடு, அவளை வேளையில் சேர்த்துகொள்ளவதாக கஜேந்திரன் கூறுகிறான். அவள் கையாலே அந்த திரிசூலத்தை அப்புறப்படுத்தினால் தான் வேலை திரும்பவும் கிடைக்கும் என சொல்ல அந்த பெண் வேறு வழியில்லை அதை செய்து முடிக்கிறாள்.
வேலையில் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் பிரச்னை என தெரிய வருகிறது. சமாதானம் செய்ய இளங்கோவனும் கஜேந்திரனும் கோஷம் போட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் முன் செல்கிறார்கள். ஆனால் இடையே வாக்குவாதம் முற்றிவிட, தொழிலாளி ஒருவன் இளங்கோவனை நோக்கி அருகே கிடந்த திரிசூலத்தை வீச அதை கவனித்த இளங்கோவன் விலகிக்கொள்ள, அது மீண்டும் கஜேந்திரனின் வயிற்றைக் கிழிக்கிறது.
அவன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்க அஜந்தா லட்சுமியிடம் நடந்ததை சொல்கிறாள். அவரோ இனி தன் மகன் பிழைக்கமாட்டான்; எல்லாம் பாட்டன் செயலால் வந்த சாபம் என புலம்ப அஜந்தா அதிர்ச்சி அடைகிறாள்.
செய்த வினைகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆன்மிகம் கலந்த ஒரு த்ரில் நாவல் இந்த தங்க திரிசூலம். |
---|