எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
வனஇலாக்கா அதிகாரியான சுந்தர்ராஜன் சிவன்மலை காட்டுக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கே நடக்கும் அதிசயங்களையும் சித்தர்களின் மகிமைகளையும் கண்டு முதலில் நம்ப மறுக்கிறார். உதவியாளர் தடுத்தும் அந்த அதிசய சம்பவங்களை ஆராய முயல்கிறார். ஒரு சித்தரின் இல்லத்தில் முத்துப்பிள்ளையையும் ஒரு கிழவியையும் சந்திக்கிறார். கனத்த மழையினால் இருவரும் ஆகாச லிங்கத்தைத் தரிசிக்க முடியாமல் சித்தரின் குடிலில் காத்திருந்தனர்.
சித்தரோ குடிலில் இருக்கும் லிங்கத்தை ஆகாச லிங்கமாக பாவித்து கொண்டுவந்த மாலையையும் பிரசாதத்தையும் சாற்றச்சொல்ல , இருவரும் அப்படியே செய்ய , சுந்தர்ராஜனும் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். மழை நின்று இருவரும் ஆகாச லிங்கத்தைத் தரிசிக்க செல்ல , சுந்தர்ராஜனும் அவர்களைப் பின்தொடர்கிறார். என்ன அதிசயம். முத்துப்பிள்ளையும் அந்த கிழவியும் சித்தரின் குடிலில் சாற்றிய மாலையும் பிரசாதமும் ஆகாச லிங்கத்தின் மேல் சாற்றப்பட்டிருந்தது.
சித்தர்களின் இரும்பைத் தங்கமாக மற்றும் ரசவாத வித்தையை அறிந்துகொள்ள நாட்டுவைத்தியர் சிவசாமியுடன் மேலும் மூவர் சிவன்மலை காட்டுக்கு வருகின்றனர். இவர்களுக்குப் பரணி எனும் இச்சதாரி நாகம் அறிமுகமாகிறான். சுந்தர்ராஜன் இவர்களைக் காப்பாற்ற பெண் இச்சதாரி பாம்பைக் கொன்றுவிட , அவரைப் பழிவாங்க பரணி காத்துக்கொண்டிருக்கிறான். சுந்தர்ராஜனோ நாகக்கல்லை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் காணாமல் போய்விட , வனஇலாக்கா அவரின் பிணம் கிடைக்காததால் அவர் இறந்துவிட்டார் என வீட்டில் அறிவித்துவிடுகிறது.

மனைவி மங்களம் சுந்தர்ராஜன் இன்னும் உயிரோடு இருக்கிறார் என நம்புகிறார். அவர் திரும்பவும் வருவார் எனும் நம்பிக்கையுடன் மூன்று மகள்களுடனும் மகன் பாலுவுடனும் வாழ்ந்து வருகிறார். மகன் பாலு வளர்ந்து , ஒரு மெக்கானிக்காக வேலை செய்கிறான். எதேச்சையாக அப்பா சுந்தர்ராஜனின் டைரியைப் படித்து விட , துப்பறியும் அதிகாரி பாண்டியனுடன் சிவன்மலைக்குப் புறப்படுகிறான்.
அதேசமயம் சிவன்மலையில் நடக்கும் அதிசயங்களை ஆராய பத்திரிக்கை நிருபர்களான ஷாலினியும் கண்ணனும் வருகிறார்கள். தமயந்தியின் குடிசையில் இருவரும் தங்க , சித்த அருள் பெற்ற பொன்னி எனும் குழந்தையைச் சந்திக்கிறார்கள். பொன்னி கண்ணன் தூக்கில் தொங்கப்போகிறான் என சொல்ல , அதிர்ந்து போகிறார்கள்.
காட்டில் உலவும் பாண்டியனும் பாலுவும் , தூக்கில் தொங்கும் ஓரு பிணத்தைப் பார்க்கிறார்கள். பல மாதங்கள் அழுகி போயிருந்தது. சற்று தொலைவில் , ஒரு பெண் அலறிக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்க , பாலு ஷாலினியை அடையாளம் கண்டுகொள்கிறான். அவள் தான் கண்டத்தைச் சொல்ல , அவள் சொன்ன இடத்தில் கண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் பொன்னியைச் சென்று பார்க்க , அவளோ கண்ணன் திரும்பவும் வருவான் என புதிர் போடுகிறாள்.