சுற்றுப்பயணி ஒருவர், புதிதாக நிர்மாணிக்கப்படும் கோயிலின் கட்டத்தின் கட்டுமானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் சிற்பி ஒருவர் ஒரு சிலையைச் செதுக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பக்கத்திலே தற்போது செதுக்கிக்கொண்டிருக்கும் சிலையைப் போலவே அச்சு அசலாக ஒரு சிலை ஒன்று இருந்தது.
வியப்பு மிகவே, அருகிலிருந்த சிற்பியிடம், “ஏன் இங்கு ஒரே மாதிரி இரண்டு சிலைகள் இருக்கின்றன? இரண்டையுமா உபயோகிக்க போகிறீர்கள்?” என கேட்டார்.
அதற்கு சிற்பியோ தலையை நிமிராமல் “இல்லை” என பதிலளித்தார். தொடர்ந்து, “ஒரு சிலைதான் எங்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால், முதலாவது சிலை இறுதி கட்டத்தின் போது சேதமடைந்துவிட்டது” என சொன்னார்.
சிற்பி சொன்னதைக் கேட்ட சுற்றுப்பயணி, பக்கத்திலிருந்த சிலையைப் பரிசோதித்தார். அவர் கண்ணுக்கோ எந்த குறையும் தெரியவில்லை. “இந்த சிலையில் எங்கே சேதமிருக்கிறது? என வினவினார்.
“அந்த சிலையின் மூக்கில் ஒரு சிறு கீறல் இருக்கிறது” என தனது வேலையைத் தொடர்ந்துக் கொண்டே சொன்னார் அந்த சிற்பி.
“இந்த சிலையை எங்கே நிறுவ போகிறீர்கள்? என சுற்றுப்பயணி கேட்க, “20 அடி தூண் உயரத்தில்” என பதில் வந்தது.
“என்னது 20 அடி உயரத்திலா?. இங்கிருந்து பார்த்தால் சிலையின் குறைபாடு யாருக்கு தெரியும்?” என கூச்சலிட்டார் அந்த சுற்றுப்பயணி.
செய்துக்கொண்டிருந்த வேலையிலிருந்து நிமிர்த்து, “எனக்கு தெரியும்” என புன்னகைத்தவாறே சொன்னார் சிற்பி.
#சிந்தனை துளி
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் தரத்தின் அளவு என்ன? அது எதை அடித்தளமாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது?
எந்த காரணத்திற்காகவாது வேலையின் தரத்தை நீங்கள் விட்டுக்கொடுத்து உண்டா?