பண்ணையாரைப் பார்க்க கிராமத்துவாசி ஒருவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். என்ன நடந்தது என வினவினார் அவர்.
“ஐயா, உங்கள் வீட்டு காளை மாடு என் காளையை கொன்றுவிட்டது” என கண்ணீர் விட்டு அழுதான். பண்ணையார் அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, “அட முட்டாளே! ஒரு மாட்டை கொலைசெய்யரது குற்றம்ன்னு இன்னொரு மாட்டுக்கு எப்படிடா தெரியும்? இந்த வழக்கு செல்லாது!” என கிண்டலாக கூறினார்.
“என்னை மன்னிச்சிருங்க ஐயா. தப்பா சொல்லிட்டேன். என் காளைதான் உங்க வீட்டு காளையை குத்தி கொன்றுவிட்டது” என சொன்னான் அவன்.
அவன் சொன்னதை கேட்டு வெகுண்டு எழுந்த பண்ணையார் உரத்த குரலில் கத்தினார் “ஓ, அப்படியா கதை. இந்த பதினெட்டு பட்டியையும் கட்டி ஆள்ர என் வீட்டுல ஒரு துறும்பையும் அசைக்க முடியாது. என்ன தைரியம் இருந்தா, என் காங்கெயன் செத்துட்டதா என்கிட்டே வந்து சொல்லுவே. கூட்டுங்கடா பஞ்சாயத்த!”
#சிந்தனை துளி
- எல்லா நேரங்களிலும் நாம் நியாயமாகத்தான் நடந்து கொள்கிறோமா?
- நமக்கு வந்தா இரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?