எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
கதை இரு தடங்களை ஒட்டி நகர்கிறது. விஜேஷ்க்கு நியூயோர்க்கில் வேலை கிடைத்திருக்க , நண்பன் ராபர்ட் சொன்னபடி வீட்டைப் பார்க்க நண்பனின் தங்கை பிளோராவைச் சந்திக்கிறான். வீட்டை நோக்கி காரில் புறப்பட விஜேஷின் போன் முணுமுணுக்கிறது. அதில் காமாச்சி எனும் பெண் காஞ்சிவரத்திலிருந்து போன் செய்வதாகவும் , அவன் காண செல்லும் வீட்டை ஏற்கனவே காண சென்ற இருவரும் இறந்துவிட்டதாகவும் அங்கே செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறாள்.
அந்த எச்சரிக்கையை விஜேஷ் அலட்சியம் செய்ய , இருவரும் வீட்டுக்குச் செல்கிறார்கள். அந்த இருட்டில் வீட்டின் முன் செல்ல எத்தனிக்கும் போது , அவன் முதுகில் ஒரு கை விழவும் , திடுக்கிட்டு திரும்புகிறான் விஜேஷ். அங்கே ப்ளாக்கி எனும் நாய். பிளோரா அது பழைய உரிமையாளரின் வளர்ப்பு நாய் என சொல்லவும் அமைதியடைகிறான் விஜேஷ்.

பல நாட்கள் பூட்டியிருக்கும் வீடு சிலந்தி வலைகளாலும் எலிகளாலும் நிரம்பியிருக்க , இந்த கட்டிடம் உறுதியானது என நம்பிக்கை அளிக்கிறாள் பிளோரா. வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள் அல்பேர்ட்ஸ்ன் வர , அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் , நியூயார்க் போலீஸ் ஆபீசர்கள் வாசலில் வந்து நிற்க, உறைந்து போன பார்வையில் அல்பேர்ட்ஸ்ன்னும் பிளோராவும்!
இரண்டாவது தடம் கோவையில். கோவை கலெக்டர் ஆபீஸில் ஒரு மனுவுடன் பெரியவர். கலெக்டர் பங்கஜ் குமார் விசாரிக்க , தன் மருமகள் மகனை விட்டு சென்றுவிட்டதாகவும் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் புரிந்துவிட்டதாக புகார் அளிக்கிறார். புகாரை விசாரிக்கும் பங்கஜ் குமார் , பெரியவர் மைக்கேல் எர்னஸ்ட் தந்த போட்டோவைப் பார்த்து திகைக்கிறான்.
போட்டோவில் அவன் மனைவி மின் மினி சர்ச்சில் திருமண கோலத்தில்! பெரியவரை மகன் அல்போன்சுடன் மறுநாள் வர சொல்லிவிட்டு , தன் ஆபிசுக்கு வந்த விவேக் விஷ்ணுவிடம் பங்கஜ் சொல்கிறார். பெரியவரும் அல்போன்சும் வீட்டிற்கு வரும் போது மின் மினி எப்படி நடந்து கொள்கிறாள் என்பதை கவனிக்கலாம் என இருவரும் ஆலோசனை சொல்கிறார்கள். மறுநாள் காலையில் மூவரும் பெரியவரின் வருகைக்காக காத்திருக்க , வாசலில் அரவம் கேட்டு எட்டிப்பார்த்தால் இன்ஸ்பெக்டர் வேக வேகமாக வந்துக்கொண்டிருந்தார்.
கொடூரமான முறையில் கொலை நடந்துவிட்டதாகவும் கொலையுண்ட அந்த நபரின் டைரியில் பங்கஜ் குமாரின் தகவல்கள் இருந்ததால் விசாரிக்க வந்ததாக சொல்கிறார் இன்ஸ்பெக்டர். யார் அந்த கொலையுண்ட நபர் என கேட்க , இறந்து போனது மைகேல் எர்னஸ்ட்!
கோவையையும் நியூயார்க்கையும் இணைக்கும் கதை தடங்கள் ஒன்றிணையும் புள்ளியில் அதிர்ச்சிக்கு நிச்சயம் பஞ்சமில்லை. கேள்விகளுக்குப் பதில் இனி மின் மினி! |