எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
கோடீஸ்வரர் தாமோதரனுக்கு ஒரே மகள் காயத்திரி. செல்வ செழிப்பு மிகுதியாக இருந்தும் ஒரே ஒரு குறை. அவளுக்கு பிறந்தது முதல் இருக்கும் வலிப்பு நோய். கவலையோ மகிழ்ச்சியோ மிகுதியினால் காயத்திரிக்கு வலிப்பு வந்துவிடும். கல்யாணம் செய்தால் இந்த நோய்க்கு மருந்தாக அமையலாம் என டாக்டர் சொல்ல , தாமோதரன் தன் தங்கை மகன் கிரிஷை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கிறார்.

ஆனால் காயத்திரியோ , கிரிஷை மணக்க தனக்கு சம்மதம் இல்லை எனவும் காசுக்காக தன்னை முன்வருபவர்கள் தனக்கு வேண்டாம் என மறுத்துவிடுகிறாள்.இதே சமயத்தில் ஊரிலிருந்து இளங்கோ என்பவன் நண்பன் ராஜேந்திரனைத் தேடி வருகிறான். நண்பன் சொன்ன இடத்தில் வாட்சமானாக வேலை தேடி போக , மரியாதையைக் குறைவால் வேலையை உதறிவிட்டு போகிறான். ராஜேந்திரன் கடிந்து பேச , இளங்கோ வீட்டை விட்டு வெளியேறுகிறான். வெளியே வந்தவனுக்கு தாமோதரனின் காரியதரிசியாக வேலை கிடைக்கிறது.
தாமோதர் பெட்டி நிறைய பணம் குடுத்து திருப்பதி உண்டியலில் போட சொல்ல , இளங்கோவோ மறுத்து இந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுப்பதே மேல் என வாதாடுகிறான். உண்டியலில் போடுவதற்கு வேலையே தேவையில்லை என சொல்லி செல்பவனிடம் , இது அவனை சோதிக்க வைத்த பரீட்சை என சொல்கிறார் தாமோதர். இளங்கோவின் நேர்மையைக் கண்டு அவன் மேல் ஈர்க்கப்படுகிறாள் காயத்திரி.
காரில் செல்லும் இளங்கோ வழியில் ராஜேந்திரன் சந்திக்கிறான். வசதியாக இருக்கும் இளங்கோவைக் கண்டு அதிசயிக்கிறான் ராஜேந்திரன். மனைவி பிள்ளையை எப்போது அழைத்து வர போகிறாய் என ராஜேந்திரன் கேட்கவும் எரிச்சலடைகிறான் இளங்கோ. மனைவி விவாகரத்து வாங்கிக்கொண்டு மகளை அழைத்து சென்றுவிட்டாள் என சொல்கிறான் இளங்கோ.
நாளுக்கு நாள் இளங்கோவின் மேல் ஈர்க்கப்பட்டு , இளங்கோவுடன் திருமணம் என்கிற அளவுக்கு சென்றுவிடுகிறாள் காயத்திரி. இடையில் இளங்கோ யாரோ ஒரு பெண்ணின் சொல்படிதான் தாமோதரின் வீட்டில் நல்லவன் நேர்மையானவன் போல் நாடகமாடுகிறான் என தெரியவருகிறது. ராஜேந்திரன் குலதெய்வ பூஜைக்கு ஊருக்கு செல்ல , அங்கே இளங்கோவின் மனைவியை காண்கிறான். இளங்கோ சொன்னது அனைத்தும் பொய் என தெரிய வருகிறது.
நல்லவன் போல் நடித்து ஏமாற்றும் இளங்கோவின் குட்டு வெளிப்படுமா?
அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்கிற உண்மையை நிரூபிக்க நடக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? இந்த ஆடு புலி ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்? ஆடா இல்லை புலியா? ஆடு புலி ஆட்டம் இதுவரை பதைபதைப்பு! |