எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
சினிமா தயாரிப்பாளரான பணக்கார கணவன் ரங்கராஜனை இருபது வருடங்களாக பிரிந்து மகன் அரவிந்தனுடன் தனித்து வாழ்பவர் மீனாட்சி. மருமகள் ரஞ்சினி அவரைப் பாரமாக நினைக்க பேத்தி ராகவியோ பாட்டியின் மேல் உயிராக இருக்கிறாள். அந்தஸ்தான பணக்கார வாழ்வை விட்டு , இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் மாமியாரின் வீம்பை அடிக்கடி குட்டி காட்டுகிறாள் ரஞ்சனி.
ஒரு சமயம் சண்டையின் போது வார்த்தை தடித்து விட , மீனாட்சி வீட்டை விட்டு முதியோர் இல்லம் சேர்ந்து விடுகிறார். அவரை தேடாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள் மகனும் மருமகளும். இடையில் , மாமனார் உடன் சேர்ந்து கொள்ள நினைத்து அதற்கான காய்களை நகர்த்துகிறாள் ரஞ்சனி. அவர் புண்ணியத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டையும் வாங்கி விடுகிறார்கள்.

முதியோர் இல்லத்தில் இருக்கும் மீனாட்சி , சமையல்காரராக வேலைக்கு அமர்கிறார். வீட்டுக்கு போன் செய்து தான் நலமாக இருப்பதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என தகவல் கொடுக்கிறார். மகன் அரவிந்தனுக்கு மட்டும் கொஞ்சம் குற்ற உணர்ச்சி.
இதற்கிடையில் அரவிந்தனின் அக்காள் மாலதியும் அன்னை வீட்டை விட்டு போனதை கேள்விப்பட்டு தனக்கும் ஒரு வீடு வேண்டும் என பேராசையில் , தம்பியின் வீட்டுக்கு வருகிறாள். ரஞ்சனியோ மாமனாரிடம் சொல்லி வீடு வாங்கி தருவதாக போக்கு காட்டி , மாலதியைக் கைக்குள் போட்டு தந்திரமாக காரியங்களை நடத்துகிறாள்.
ரங்கராஜனின் இரண்டாம் மனைவி சாவித்ரி அரவிந்தனை நேரில் சந்திக்க , அந்த வீடு சாவித்ரியின் உபயத்தால்தான் தங்களுக்கு கிடைத்தது என உண்மை புரிய வருகிறது. ரங்கராஜன் படம் எடுக்க காசை விரயம் செய்வதாகவும் பேராசைமிக்க ஆட்கள் சூழ அவர் இருப்பதாகவும் , அவர் மீது வழக்கு தொடுத்து பூர்விக சொத்து அழியாமல் காக்க வேண்டும் , அவரைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்.
உண்மையை அறிந்த அரவிந்தன் , தனக்கு வீடும் வேண்டாம் சொத்தும் வேண்டாம் என கூறி வீட்டு பத்திரத்தையும் சாவியையும் திரும்பி கொடுத்து விடுகிறான். இதை அறிந்த ரஞ்சனியோ லாவகமாக இரண்டையும் கைப்பற்றி வீட்டுக்குள் அரவிந்தன் அறியாமல் மறைத்து வைக்கிறாள்.
மாலதியுடன் சேர்த்து , சாவித்திரியை ரஞ்சனி சந்திக்க , அரவிந்தனின் மாறுதலுக்கான காரணத்தை அறிகிறாள். அரவிந்தனை நாங்கள் வழக்கு தொடுக்க வைக்கிறேன் என சொல்லிவிட்டு ரஞ்சனி புறப்படுகிறாள். மீனாட்சி எழுதியதை போலவே மாலதியை ஒரு கடிதம் எழுத வைக்க , அரவிந்தனோ அதை நம்பி வழக்கு தொடுக்க முடிவெடுக்கிறான்.
சுயகௌரத்தோடு வாழும் மீனாட்சி வாழ்வில் ஜெயித்தாரா? ரஞ்சனி மாலதியின் பேராசைக்கு விளைவென்ன?
சூழ்ச்சிகள் பின்னப்பட்டிருக்க தயாரிப்பாளர் ரங்கராஜனின் கதி என்ன? ஆகாயம் காணாத நட்சத்திரம் தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் வெற்றியின் பளபளப்பு. |