ஒரு ஊரில் மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஊர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அவர்களுக்கு ஞான உபதேசங்களைப் போதித்து வந்தார். அவரது அறிவாற்றலையும் ஞானத்தையும் கண்டு மக்கள் அவரின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். மகானின் புகழ் பக்கத்துக் கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
மகானின் பெருமை நாளுக்கு நாள் பெருகுவதைக் கண்டு போக்கிரி ஒருவன் பொறாமையால் வெந்தான். அவரை ஊர் மக்களின் முன் சிறுமை படுத்த எண்ணி, திட்டம் தீட்டினான். முதல் வேலையாக, ஒரு வண்டை பிடித்தான்.
“இதை என் கையில் வைத்துக்கொண்டு, உயிரோடுயிருக்கிறதா இல்லை இறந்துவிட்டதா என அந்த மகானைக் கணிக்க சொல்வேன். ஒரு வேளை, இறந்துவிட்டது என சொன்னால் அப்போதே வண்டை விடுவித்துவிடுவேன். உயிரோடுயிருக்கிறது என்றாலோ உடனே வண்டை நசுக்கிவிடுவேன். ஊரார் முன் அவர் கண்டிப்பாக வெட்கி தலை குனிவார்.”
உடனே மகான் இருக்கும் குடிசையை நோக்கி உற்சாகத்தோடு நடந்தான். அவரிடம் “என் கையில் இருக்கும் வண்டு உயிரோடு இருகிறதா இல்லையா என உங்களால் சொல்ல முடியுமா? என கேட்டான். மகானுக்கு அந்த குறும்புக்காரனின் நோக்கம் நன்றாகவே புரிந்தது.
அனைவர் முன்னிலையிலும் அவனை நோக்கி, “மகனே, வினாவிற்கு விடை முற்றிலும் உன் கையில்!” என புன்னகைத்தவாறே பதிலளித்தார்.
#சிந்தனை துளி
- மற்றவர்களின் அறிவாற்றலைச் சோதிக்கும் முன் நமக்கு அந்த தகுதி இருகிறதா என யோசித்தது உண்டா?
- அறிவாற்றலை விட மதிநுட்பம் சிறந்தது என ஒப்புக்கொள்கிறீர்களா?