என்னை மேலும் கிழுமாக அவன் பார்த்த அந்த பார்வையில் துணுக்குற்றேன். இரவு 12 மணிக்கு மேலாகிருந்தது. என்னை உள்ளே அமரும்படி பார்வையில் சைகை செய்தான். அச்சத்தால் உடம்பில் சிறு நடுக்கம் பிறந்தது. பேசலாமல் வேறு ஒரு வண்டிக்காக காத்திருக்கலாமா என்று கூட யோசனை வந்தது. ஆனால் சாத்தியமில்லை. இந்த நள்ளிரவு நேரத்தில் துணைக்கு யாருமில்லை. இந்த Auto-வை விட்டால் வீட்டுக்கு செல்ல வழியில்லை. கைப்பையில் இருக்கும் Pepper Spray நினைவுக்கு வந்தது. தைரியமாக அமர்ந்தேன். Hyderabad கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு, Pepper Spray என் கைப்பையில் நிரந்தரமாக குடியேறியிருந்தது. அந்த சம்பவத்தை நினைத்து பார்க்கவே உடம்பு பதறியது. தப்பாக ஒரு அடிவைத்தால் கூட இவன் கண்ணை spray-யால் எரித்துவிடுவேன்.
அவன் பார்வை சாலையை நோக்கியிருந்த்து, முகமோ ஒரு துப்பட்டாவால் மூடபட்டிருந்தது. என் கைபேசியில் செல்லும் பாதை சரிதானா என் Google Map மூலம் சரிபார்த்துக்கொண்டேன். சரிதான் என்றது Google Map. இரவு நேரம் தென்றல் தாலாட்டு பாடியது. ஒரு நொடி கண்ணயர்ந்துபோனேன். திடீரென விழித்தேன், அவன் பார்வை பக்கவாட்டு கண்ணாடி வழியாக என்னை நோக்கிக்கொண்டிருந்தது. பிறகு மீண்டும் சாலையை நோக்கி. செல்லும் பாதை சரியென மீண்டும் உறுதிப்படுத்தியது Google Map. அவன் ஒரு பாடலை முணுமுணுக்க தொடங்கினான். ஆத்திகவாதியில்லை என்றாலும் அவன் பாடுவது ஏதோ ஒரு மந்திரம் என தெளிவாக புரிந்தது.
ஆவல் தொற்றிக்கொள்ள என்ன பாட்டு அது என வினவினேன். துப்பட்டாவை விலக்கிவிட்டு “சாரி மேடம். நீங்க தூக்கக்கலக்கத்தில் இருந்திங்க. Auto-ல tape கூட இல்லை அதான் பாட்டு பாடினேன்” என கூறினான். அவர் மரியாதையாக பேசியதை கேட்டு முதலில் ஆச்சிரியப்பட்டாலும், பயம் குறைந்து மனம் லேசாகிபோனது. Pepper Spray-வை இறுக்கமாக பற்றிருந்த பிடியை தளர்த்தினேன்.
“நீங்கள் பாடியது மந்திரம் போலிருந்தது. என்ன மந்திரம் அது? கொஞ்சம் கேட்க வித்தியாசமாக இருந்ததே!”
“நிஜமாகவே தெரிஞ்சிக்க விரும்புறீங்களா? சொன்ன உங்களுக்கு பிடிக்காம கூட போகலாம்.”
அவர் சொன்னது என் ஆவலை இன்னும் பலமாக தூண்டியது.
“Yes! எனக்கு கண்டிப்பா தெரியனும். சொல்லுங்க!”
“இது இராவணன் எழுதின சிவ தாண்டவ ஸ்தோத்ரம்”
அதை கேட்டு அதிர்ந்துப்போனேன். விலகி போன பயம் மீண்டும் தொற்றிக்கொண்டது.
“நீங்க இராவணனையா கும்படரீங்க?” இந்த ராத்திரி நேரத்தில் இப்படி கேட்பது முட்டாள்த்தனமான இருக்கலாம். ஆனால் கேட்க தோணியது.
“இல்லை, ஆனால் நான் ராமனையும் கும்படறதில்லை”.
“ஏன்?”
“சொல்லுங்க. ராம ராவண யுத்தம் ஏன் நடந்துச்சு?”
“ஏன்னா இராவணன் சீதையை கடத்திட்டுபோனதால”. இது உலகத்துக்கே தெரிந்த பதில்.
“Exactly! இந்த கதையை நீங்க பார்க்கும் கண்ணோட்டம் அது.”
“அப்போ உங்க கண்ணோட்டம் என்ன?”
“ராமனின் தம்பி லட்சுமன் ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமன் மேல் ஆசைபட்டாள் என்கிறதுக்காக, அவள் மூக்கை வெட்டினான்”.
நான் பேசுவதுறியாமல் பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவரை வெறித்தேன். உரையாடல் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது.
“இந்த உலகத்துலே எந்த அண்ணன்தான் தங்கச்சிக்கு அப்படி நடந்தா சும்மா இருப்பாங்க”.
அவர் சொல்லுவதில் ஒரு நியாயமிருந்தது. இருந்தாலும், “இராவணன் அரக்கன் இல்லையா? ஒரு அசுரன்” என கேட்டேன்.
“சின்ன வயசுலேர்ந்து உங்கள் அப்பா அம்மா இராவணன் பத்தி இப்படித்தான் சொல்லி உங்களை வளர்த்தாங்க. அவங்க அப்பா அம்மாவும் அப்படித்தான் அவங்ககிட்டயும் சொல்லி வளர்த்திருபாங்க”.
இன்னும் வீட்டைச் சென்றடைய 25 நிமிடங்கள் என Google Map காட்டியது. இப்பொழுது அதைப் பற்றி எனக்கு சிறிதும் அக்கறையில்லை.
“இராவணன் ஒரு மிக சிறந்த அறிவாளி. அவரின் பத்து தலைகளும் அவரிடமிருந்த பாண்டித்தியங்களுக்கும், திறமைகளுக்கும், நுட்பங்களுக்கும் உவமையே ஒழிய, காலங்காலமாக சொல்லபட்டது போல அவருக்கு நிஜத்தில் பத்து தலைகள் இல்லை. மிக சிறந்த அரசன், ஆட்சியாளர்”.
நான் எதும் பேசாமல், அவர் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
“இராவணன் சிறந்த கல்வியாளரும் கூட. தற்காப்பு கலையில் நிபுணர். 7 ஆயுர்வேத புத்கங்களை எழுதியிருக்கார், அப்படினா மருத்தவ துறையிலும் கைதேர்ந்தவர். சிறுவர்களுக்கான ஆயுர்வேத புத்கத்தையும் எழுதியிருக்கார்”.
நான் பதட்டமான நிலையிலிருந்து தளர்வானேன். ஒரு Auto டிரைவரிடமிருந்து இதை கேட்பது புதியதாகவும் வினோதமாகவும் இருந்தது.
“சீதையை கடத்துவதற்கு அவர் என்ன வாகனம் பயன்படுத்தினார்னு தெரியுமா?”
“Ya. ஒரு வகையான விமானம்”.
“ஆம். புஷ்பக விமானம். அவர்தான் அதை கண்டுபிடிச்சார். அவர் ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட”.
“ஆனா, இன்னொருவரோட மனைவியை கடத்துவது குற்றம்தானே?”
“ஆமா குற்றம்தான். இன்னொருவரோட முக்கை அறுப்பதும் குற்றம்தான்”.
நான் அமைதியானேன். அவர் தொடர்ந்தார்.
“இராவணன் சீதையை கடத்திய பிறகு, சீதையிடம் வலிமையைக் காட்டி கட்டாய படுத்தியதில்லை. அசோக வனத்திலிருந்த வேலையாட்கள் எல்லாம் பெண்கள்தான். இராவணன் எப்படி அசுரனாவான்?”.
இந்த கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.
“சீதை கிடைத்த பிறகு ராமன் என்ன செய்தான்?”
“ஓ..அக்னி பரிட்ச்சை”.
“ஆம். ராமன் சீதையின் புனிதத்தைப் பரிசோதித்தான். சீதை அயோத்தியை விட்டு காட்டுக்கு அனுப்பபட்டாள்”.
குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு ஒரே அமைதி.
“உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என கேட்டேன்.
“நான் நிறைய படிப்பேன். School-ல சொல்லிகொடுத்த விசயங்களை கண்முடித்தனமா நம்பறதுமில்லை பின்பற்றதுமில்லை.”
அந்த மனிதரின் மதிநுட்பத்தைக் கண்டு மெய்சிலிர்த்துபோனேன்.
“நான் இராமன் கெட்டவன்னு சொல்லவரல. அதே சமயம் இராவணன் அசுரன் என்கிறதுலே எனக்கு உடன்பாடு இல்லை.”
“அப்போ இந்த உலகம் ஒரு பொய்யான விஷயத்தை நம்பிகிட்டு இருக்கா?”
“இல்லை, இந்த உலகுத்துக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கு. அதே மாதிரி எனக்கும் இருக்கு. யாருக்கு தெரியும் இந்த கதையெல்லாம் உண்மையா பொய்யான்னு? கட்டுக்கதையா கூட இருக்கலாம்”.
இந்த மனிதரின் பேச்சு என் ஒட்டுமொத்த நம்பிக்கையின் ஆணிவேரையே அசைத்துவிட்டது.
“மேடம், கொஞ்ச நாளைக்கு முன்னே நடந்த Hyderabad கற்பழிப்பு சம்பவம் பத்தி கேள்விபட்டிங்கதானே?”
“ஆம், கேள்விபட்டேன்”.
“எல்லார்க்கும் அவங்க அவங்க தனிப்பட்ட கருத்து இருந்தது. அந்த பொண்ணு ஏன் ராத்திரியில் அவ்வளவு late-அ வெளிய இருக்கனும். மரியாதையான குடும்பத்தை சேர்ந்த பொண்ணுங்க அப்படி செய்யமாட்டார்கள்–னு சில பேர் சொன்னாங்க. இன்னும் சில பேர், ஏன் அந்த பெண் போலீசுக்கு போன்செய்யாம தன் சகோதரிக்கு போன் பண்ணானு கேட்டாங்க. இதை சொன்னவங்க எல்லாம் படிச்சவங்க, அமைச்சர்கள், சமுதாயதால பெரிய மனுசங்கன்னு சொல்லப்படறவங்க. யார் இவங்க எல்லாம்? ராமர்களா இல்ல ராவணர்களா?”
மறுபடியும் என்னிடம் சலனமில்லை.
“காலங்காலமா நல்லது கெட்டதுக்கான அர்த்தம் ரொம்ப தவறாகவே காண்பிக்கப்படுகிறது. நமக்கு சொல்லப்பட்டதை கொஞ்சம்கூட ஆராயாமல் கண்மூடித்தனமாக நம்பறோம்.”
ஒரு சாதாரன Auto டிரைவர் வாழ்கையைப் பற்றிய என் கண்ணோட்டத்தை மாற்றிவிடுவார் போலிருக்கிறதே!
“இந்த உலகம் நாம் பார்ப்பது போலில்லை. இங்கே ராமனும் உண்டு ராவணனும் உண்டு. யார் யார் எப்படிபட்டவர்கள்-ன்னு நாம்தான் சாமர்த்தியமா கண்டுபிடிக்கணும்.”
சிறிது நேர அமைதிக்கு பிறகு, அவர் மீண்டும் மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் வார்த்தைகளோ என் மூளையில் ஆரவாரம் செய்துகொண்டிருந்தது. நாம் வாழும் இந்த சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் நம் முதாதையர்கள் வழிகாட்டிய நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகுவீர்கள். ராமனையோ ராவணனையோ பின்பற்றினால் தான் நல்லவர்களாக இருக்கமுடியும் என்கிற கட்டாயமில்லை.
Auto நின்றதும், காசைக் கொடுத்துவிட்டு இறங்கினேன்.
“குட் நைட் மேடம்” சிரித்தபடியே சொன்னார்.
“குட் நைட்”. என புன்னகைத்தபடியே மறுமொழி கூறினேன்.
Auto செல்வதை பார்த்துக்கொண்டே நின்றேன். அவர் மந்திரத்தைப் உரக்க பாடிக்கொண்டே சென்றார். சிறிது தொலைவுக்கு சென்றபிறகும் அவரது குரல் எனக்கு எதிரொலித்துக்கொண்டேருந்தது.
*இந்த கதை Amol Raikar-இன் “A Night with a Demon” என்ற சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.